Wednesday 5 November 2014

அரிசி உடைசல் உப்புமா!!!

அரிசி உடைசல் உப்புமா


அரிசி உப்புமா, குருணை உப்புமா, அரிசி உடைசல் உப்புமா என்று சொல்லப்படும் அனைத்துமே ஒன்று தான். எங்க வீட்டில் ரவை, சேமியாவில் செய்யப்படும் உப்புமாவுக்கெல்லாம் வேலையே இல்லை. பேச்சிலர்ஸ் டேஸில் ரவா உப்புமா சாப்பிட்டு அலுத்ததால் ரவா உப்புமாவே செய்யாதே என்று சொல்லியதால் செய்வதேயில்லை. சேமியாவும் அப்படித் தான்….:)

அரிசி உப்புமா என்றால் எல்லோருக்குமே இஷ்டம். அதுவும் வெங்கலப் பானையில் செய்து காந்தலோடு சாப்பிட்டால் ஆஹா! சிலர் குக்கரில் வைப்பார்கள். அதெல்லாம் இங்க நடக்கவே நடக்காது…:) எங்க அப்பாவுக்கு வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம், குருணை உப்புமா என்றால் உயிர்.

இங்கு நான் சொல்லப்போகும் செய்முறை என் மாமியார் வீட்டு முறைப்படி… ஒரு சிலர் வீட்டு வழக்கம் வேறு. இதிலயும் மாற்றங்கள் செய்வார்கள்.

தேவையானப் பொருட்கள்:-

அரிசி – 1 தம்ளர்
துவரம்பருப்பு – 1 கையளவு
கடலைப்பருப்பு – 1 கையளவு
மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய்துருவல் – சிறிதளவு
நெய் - சிறிதளவு

தாளிக்க:-

கடுகு – ½ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
வரமிளகாய் – 2 (அ) 3
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 2 குழிக் கரண்டி

செய்முறை :-

கொடுக்கப்பட்டுள்ள அரிசி, துவரம்பருப்பு, மிளகு, கடலைப்பருப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு ரவை போல் பொடித்துக் கொள்ளவும். அரிசியில் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசறி வைத்து ஐந்து நிமிடம் கழித்து பருப்புகள், மிளகுடன் பொடித்தால் ஒன்று போல பொடிக்க வரும். எப்படி வசதியோ அப்படி செய்யலாம்.



அடுப்பில் வெங்கலப் பானையை வைத்து எண்ணெய் விட்டுக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும். அடுத்து வரிசையாக கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, இரண்டாக கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை, இவற்றுடன் பெருங்காயம் சேர்க்கவும். பொன்நிறமாக வறுபட்டதும் தண்ணீர் விட வேண்டும். 1 தம்ளர் அரிசிக்கு 2 1/2 தம்ளர் தண்ணீர் விடலாம். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கொதிக்கும் போது சிறிதளவு தேங்காய் துருவல் சேர்க்கவும். இது விருப்பம் தான்.



தண்ணீர் கொதிக்கும் போது, அடுப்பை மிதமான தணலில் வைத்து, பொடி செய்த அரிசி ரவை கலவையை ஒரு கையால் போட்டுக் கொண்டே ஒரு கையால் கிளற வேண்டும். விட்டு விட்டால் கட்டி தட்டி விடும். கலவை தண்ணீருடன் சேர்ந்து கெட்டிப் பட்டதும், சரியான அளவு உள்ள மூடியை போட்டு மேலே ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சூடான இந்த தண்ணீரை சேர்த்து கிளற வசதியாக இருக்கும்.



அவ்வப்போது மூடியை எடுத்து கிளறி விடலாம். மேலோட்டமாக கிளற வேண்டும். அடி வரை கிளறினால் அடிக்காந்தல் கிடைக்காது. அடுப்பும் குறைந்த தணலில் தான் இருக்க வேண்டும். நன்றாக வெந்தாலும் அடிக் காந்தலுக்காக சிறிது நேரம் விடவும். ஏறக்குறைய இருபது நிமிடங்களுக்கு பிறகு நமக்கு சுவையான அரிசி உப்புமா தயாராக இருக்கும். காந்தலானவுடன் மணமே உங்களை அடுப்பை நிறுத்த அழைக்கும். மேலே சிறிதளவு நெய் விட்டால் வாசனையாக இருக்கும். இதுவும் விருப்பமே.. ஐந்து நிமிடம் உலைப்பாற விட்டு விட்டு கபளீகரம் செய்யலாம்…:)

பின்குறிப்பு – 1  இதற்கு தொட்டுக் கொள்ளவென்று தனியாக எதுவும் கட்டாயமில்லை. சர்க்கரை, நெய், ஊறுகாய், கொத்சு, சாம்பார் என எதுவோடும் ஒத்துப் போகும்.

பின்குறிப்பு – 2 வெங்கலப் பானையில் செய்வதால், செய்த சிறிது நேரத்தில் சாப்பிட்டு விடவும். நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது.

பின்குறிப்பு – 3 அடுப்பை நிறுத்திய ஐந்து நிமிடங்கழித்து உப்புமாவை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு அடிக்காந்தலை பெயர்த்து எடுத்தால் வந்து விடும். கிரிஸ்பியாக பிரமாதமாக இருக்கும்.

பின்குறிப்பு - 4 எண்ணெய் கொஞ்சம் தாராளமாக சேர்த்தால் சுவையும் கூடுதலாகும்….:)

No comments:

Post a Comment