Monday, 7 July 2014

சமையல் பழகுவோமா!!!

மகளின் திருமணத்தை நடத்துவதில் தந்தைக்குச் சுமை இருக்கிறதோ இல்லையோ, அம்மாவுக்கு நிச்சயம் ஒரு கவலை இருக்கும். அது மகள் தனிக் குடித்தனம் போய் என்ன செய்யப் போகிறாளோ என்பதுதான். ஏனென்றால் இன்றைய பெண்கள் எல்லாம் நன்றாகப் படித்து வேலைக்குப் போன பின்னர் திருமணம் செய்து கொள்கின்றனர். கல்லூரி, அதன்பின் அலுவலகம் என்று அலைந்து திரிந்ததால் அம்மாவிடம் நிச்சயம் சமையலைப் படித்த பெண்கள் நூற்றுக்கு ஓரிருவர் தான் இருப்பார்கள். இவர்களுக்கு இந்தக் காலத்தில் இன்டர்நெட் நல்ல துணையாய் இருக்கிறது. பல இணைய தளங்கள் அனைத்து உணவுகளையும் தயாரிக்கும் முறைகளை மிக விவரமாகப் பட்டியலிடுகின்றன. என்ன என்ன பொருட்கள் தேவை, அவற்றை என்ன செய்திட வேண்டும் என்று விபரங்களுடன் போட்டுள்ளனர். சில இணைய தளங்களில் வீடியோ மூலம் சமைத்தே காட்டுகின்றனர். இவற்றில் சில தளங்களை இங்கு பார்க்கலாம்.
1.http://www.indobase.com/recipes/: இந்த தளம் மிகவும் விரிவாகத் தொடங்கி ஏறத்தாழ நாம் நினைக்கும் அனைத்து உணவு தயாரிக்கும் முறைகளையும் பட்டியலிடுகிறது. அது மட்டுமின்றி என்ன என்ன உணவு மற்றும் உணவுப் பண்டங்கள் எந்த பண்டிகையின்போது செய்திட வேண்டும் எனவும் காட்டுகிறது. அத்துடன் ஒவ்வொரு பிரதேசமாக அங்கு உண்ணப்படும் வகையினைத் தருகிறது.இந்த தளம் இருந்தால் எந்தக் கவலையுமின்றி உணவினைத் தயாரிக்கலாம். மனைவியைப் புதிதாக மணம் முடித்த மகளுக்குத் துணையாக அனுப்பிய பின், தந்தைகளும் இதனைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.
2. http://www.manjulaskitchen.com/: இது ஓர் அருமையான சமையல் தளம் . உணவு தயாரிக்கப் பயன்படும் பொருட்களைக் கொண்டு பிரிவுகள் இருக்கின்றன. உணவுப் பதார்த்தங்கள் வகையிலும் பிரிவுகள் உள்ளன. இதன் சிறப்பு இங்கே தரப்படும் வீடியோ விளக்கப்படங்கள். நமக்குத் தேவையானதை டவுண்லோட் செய்து கூட பின் பயன்படுத்தி சமைத்துக் கொள்ளலாம். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்திய ஆங்கிலத்தில் விளக்கக் குறிப்புகள் தரப்படுகின்றன.
3.http://www.ifood.tv/ : இந்த தளமும் நாம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வீடியோ கிளிப்களைத் தருகிறது. ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமின்றி இந்தியர்கள் தரும் வீடியோ காட்சிகளும் உள்ளன. தயிர் சாதம் தயாரிப்பது எப்படி என்ற வீடியோ கூட இதில் உள்ளது.
தேவையான உணவினைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து பழகிக் கொள்ளும் வகையில் மேலே சொல்லப்பட்ட அனைத்து தளங்களும் உள்ளன. இனி என்ன கவலை! இந்த முகவரிகளிலிருந்து முக்கிய உணவு தயாரிக்கும் வீடியோக்களை டவுண்லோட் செய்து சிடியில் காப்பி செய்து மகளுக்கான சீர் செய்திடுகையில் சேர்த்துக் கொடுத்துவிட வேண்டியதுதானே!

No comments:

Post a Comment