Sunday, 8 May 2016

Tips!!!

பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும். வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும். சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம். ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும். தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும். பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும். இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும். தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும். மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும். பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும். வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும். தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும். எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும். தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும். துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும். நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும். கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்துச் சமைக்க வேண்டும். குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும். தோசைக் கல்லில் தோசை வராமல் இருந்தால் வெங்காயத்தை அதில் தேய்த்து விட்டு பின் தோசை சுட்டால் தோசை நன்றாக வரும். அரிசி, பருப்பு வகைகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் போது காய்ந்த வேப்பிலைகளை போட்டு வைத்தால் புழு பூச்சிகள் அண்டாது. அடி பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய சிறிது நீரில் வெங்காயத்தை போட்டு அதே பாத்திரத்தை கொதிக்க விட்டால் சுத்தமாக மாறிவிடும். முள்ளங்கியை வேக வைக்கும் போது சிறிது சர்க்கரையை சேர்த்து வேக வைத்தால் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கியதும் மோர் கலந்த நீரில் போட்டு விட்டால் கருக்காமல் இருக்கும். முட்டையை வேக வைக்கும் போது தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து விட்டால் சீக்கிரம் வேகுவதுடன் முட்டையின் ஓட்டையும் எளிதில் பிரிக்கலாம். நன்றாக முற்றிய தேங்காயை துருவுவதற்கு கஷ்டமாக இருக்கும். அதற்கு தேங்காயை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு துருவினால், மிகவும் எளிதாகத் துருவலாம். சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதில் சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும். பொங்கல் செய்யும் போது நீர் அதிகமாகி விட்டால், அதில் வறுத்த ரவையை ஒன்று அல்லது இரண்டு கைப்பிடி போட்டு கிளறினால் பொங்கல் நன்கு சேர்ந்து கெட்டியாகி விடும். இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் கலந்து வைத்தால், இட்லி மிருதுவாக இருக்கும். உளுந்து வடை செய்யும் போது ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழையை சேர்த்து ஆட்டி செய்தால், நறுக்கிப் போட்டு செய்வதை விட வாசனையாக இருக்கும். ரவா தோசை செய்யும் போது 2 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென சுவையாக இருக்கும். முதல் நாள் வாங்கிய கீரையை மறுநாள் பயன்படுத்தும் போது கீரையின் வேர்பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால், கீரை மறுநாள் வரை வாடாமல் இருக்கும். அப்பளம், வடாம், வற்றல் போன்றவை வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது பெருங்காயத்தைப் போட்டு வைத்தால், அவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். உலர் திராட்சையை காற்றுப் புகாவண்ணம் நன்கு மூடிய பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும். காபி போட்ட பின், அந்த காபி தூளை காயவைத்து பாத்திரம் துலக்கினால், பாத்திரங்கள் மின்னும். கடலைப் பருப்பை வறுத்து, பின் போளி செய்தால், போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். பட்டாணியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால், வெந்ததும் வாசனை நன்றாக இருக்கும். தயிர் பச்சடி நீர்த்துப் போய்விட்டால், அதனுடன் சிறிது நிலக்கடலையை வறுத்து பொடியாக அரைத்து சேர்த்தால் பச்சடி கெட்டியாகிவிடும். குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், தக்களிப் பழத்தையோ அல்லது உருளைக்கிழங்கையோ வெட்டிப் போட்டு கொதிக்க வைத்தால் உப்பு குறைந்துவிடும். சாம்பார் செய்யும் போது அதனுடன் ஒரு நெல்லிக்காயைச் சேர்த்துச் செய்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும். சேப்பங்கிழங்கை தோல் உரித்ததும் அதன் கொழகொழத்தன்மை போக சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து விட்டு பிறகு எடுக்க வேண்டும். அடைக்கு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் அடை மொறுமொறுப்பாக இருக்கும். கொழுக்கட்டை செய்யும் போது மாவுடன் சிறிது பால் சேர்த்துப் பிசைந்து செய்தால் கொழுக்கட்டை விரியாமல் இருக்கும். உளுத்தம்வடை செய்யும் போது சிறிதளவு இட்லி மாவு சேர்த்துச் செய்தால், வடை சுடும் போது அதிகம் எண்ணெய் குடிக்காததோடு, சுவையும் நன்றாக இருக்கும். பாகற்காயை சிறிது நேரம் உப்பு நீரில் ஊறவைத்து பின்னர் சமைத்தால், கசப்பு குறைவாக இருக்கும். கிழங்குகளை வேக வைக்கும் முன், உப்பு நீரில் சிறிது நேரம் ஊறவைத்த பின் வேக வைத்தால் கிழங்கு விரைவில் வெந்து விடும். இட்லிக்கான அரிசியுடன் சிறிது அவல் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போன்று இருக்கும். பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும். தேங்காய் சட்னி செய்யும் போது, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால், சுவை கூடுதலாக இருக்கும். முட்டை வேக வைக்கும் போது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை ஓடு உரிக்க எளிதாக இருக்கும். மைக்ரோவேவ் அவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும். இல்லையென்றால் சிறிதாக நறுக்கியவை வெந்தும், பெரிதாக நறுக்கியவை வேகாமலும் இருக்கும். அரிசியால் செய்த உணவுகளை மைக்ரோவேவ் அவனில் மறுமுறை சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், விரைவில் சூடாகும். சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். மீனை சுத்தம் செய்வதற்கு முன் சிறிது நேரம் உப்பு சேர்த்து கிளறி வைத்திருந்தால், மீனிலிருந்து வாடை எதுவும் வராது. இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவைத்தால், இறால் வாடை மிகவும் குறைவதோடு, சுவையும் கூடுதலாக இருக்கும். துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும். சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சோயா மாவும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும். ஒரு தேக்கரண்டி சோப்புத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் இவை இரண்டையும் சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு தங்க நகைகளை இதற்குள் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து சிறிய பிரஷ் (பழைய டூத் பிரஷ்) கொண்டு தேய்த்து தண்ணீரில் கழுவினால் தங்க நகைகள் புதிது போல் மின்னலடிக்கும். தண்ணீரில் சிறிது பாலை விட்டு துடைத்தால் வெள்ளி நகை பளிச்சிடும். அதே போல் டூத் பேஸ்டால் கழுவினாலும் வெள்ளி நகை பளபளக்கும். சிறிதளவு புளியை கரைத்து சிறிது உப்பு, சிறிது சமையல் சோடா உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, இதில் வெள்ளி நகைகளைப் போட்டு எடுத்தால் நகை பளிச்சென பளபளக்கும். மழைக் காலத்தில் தீப்பெட்டிக்குள் நான்கைந்து அரிசி மணிகளைப் போட்டு வைத்தால் தீக்குச்சி உரசியவுடன் பற்றிக் கொள்ளும். குளிர் சாதனப் பெட்டியில் (Fridge) எலுமிச்சம் பழத்தின் தோலை வைத்திருந்தால் உள்ளே உள்ள நாற்றம் நீங்கி மணமாக இருக்கும். ரத்தக்கறை படிந்த துணிகளை உப்புக் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துத் துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.

No comments:

Post a Comment