விருந்தாளிக்கு கொடுக்க மிகவும் ஈஸியான ஸ்வீட் ப்ளீஸ்... பிரெட்டை நீளமாக வெட்டி நெய்யில் பொரித்து, பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுக்க... சுவையான திடீர் ஸ்வீட் ரெடி! வெல்லத்தை எளிதாக பொடிப்பது எப்படி? வெல்லத்தை கேரட் துருவியின் பெரிய துளைகள் உள்ள பக்கம் துருவினால், பூப்பூவாக உதிர்ந்து வரும். ரவா தோசை மொறுமொறுவென வருவதற்கு என்ன அளவு போட வேண்டும்? ரவை 2 பங்கு, மைதா ஒரு பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு என்ற அளவில் சேர்த்து, மாவு தயாரித்து, தோசை வார்த்தால்... மொறுமொறுப்பாக வரும். அல்வா கிளறும்போது, இறுகி பாறை போல் ஆகிவிட்டால் எப்படி சரிசெய்வது? முழு தேங்காயை துருவி அரைத்து பாலெடுத்து, அல்வாவில் ஊற்றி, மிதமான சூட்டில் அடுப்பை எரிய விட்டு கிளறினால், அல்வா நெகிழ்ந்து சுவை கூடுதலாகி வரும். ஃப்ரிட்ஜில் வைத்தாலும், கரன்ட் பிரச்னையால் மாவு புளிப்பதை எப்படி தவிர்ப்பது? இட்லி, தோசை மாவுடன் சிறிது காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் போதும்... மாவு சீக்கிரம் புளிக்காது. ஏலக்காய் நமத்துப் போய்விட்டால் பொடிப்பது எவ்வாறு? அடுப்பில் வெறும் வாணலியை வைத்து, நமத்துப் போய்விட்ட ஏலக்காய்களை அதில் போட்டு புரட்டி எடுத்து, பின்னர் பொடிக்க... நைஸாக பொடியும். போளியை வேகவிட்டு எடுக்கும்போது உடைந்து போகாமல் மிருதுவாக வர வழிமுறை சொல்லுங்களேன்... போளிக்கு பிசைந்த மைதா மாவை நன்கு உலர்ந்த ஆட்டுக்கல்லில் போட்டு இடித்து, பிறகு வழக்கம்போல் தயாரித்தால்... போளி விரிசல் விடாமல் மிருதுவாக வரும். குக்கரின் உள்பாகம் 'பளிச்’சென இருக்க என்ன செய்யலாம்? முதல் நாள் இரவே புளித்த மோரை குக்கரில் ஊற்றி மூடி வைத்துவிடுங்கள். மறுநாள் எடுத்து தேய்க்க... பளபளவென ஆகிவிடும்! தணுஜா: இனியெல்லாம் ருசியே! சந்தேகங்களும்... தீர்வுகளும் 'சமையல் சூப்பர்!’ - குடும்பத்தினரிடமிருந்தோ, விருந்தினரிடமிருந்தோ இந்த வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டால் போதும்... அதுவரை சமையலறை புழுக்கத்தில் வியர்க்க விறுவிறுக்க உழைத்து பட்ட சிரமங்கள் எல்லாம் மறைந்து, பஞ்சு மேகத்தில் மிதப்பது போன்ற உணர்வு தோன்றும் இல்லத்தரசிகளுக்கு. இந்த உணர்வை நிரந்தமாக்கும் வகையில், உங்கள் சமையல் சிறப்பாக அமைவதற்கும், சமைக்கும்போது ஏற்படும் சந்தேகங்களைக் களைவதற்கும் சமையல் கலையில் கைதேர்ந்தவர்கள் யோசனைகள் கூறும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு உறுதுணை புரிபவர் சுபா தியாகராஜன். கட்லெட் செய்யும்போது ரஸ்க்தூள் எண்ணெயில் உதிராமல் இருக்க என்ன செய்யலாம்? ரஸ்க் தூளில் ஒரு டீஸ்பூன் மைதா மாவைக் கலந்து, பின்னர் கட்லெட்டைப் புரட்டி எண்ணெயில் போட்டால், தூள் எண்ணெயில் உதிர்ந்து கருகாமல் இருக்கும். வித்தியாசமான பருப்பு உருண்டைக் குழம்பு தயாரிப்பது எப்படி? கடைகளில் விற்கும் பக்கோடாக்களை வாங்கி, அதில் இருக்கும் பெரிய துண்டுகளை எடுத்து பருப்பு உருண்டைக் குழம்புக் கலவையில் போட்டுத் தயார் செய்தால், வித்தியாசமான பக்கோடா உருண்டைக் குழம்பு ரெடி! சில்லி காலிஃப்ளவர், எண்ணெய் குடிக்காமல் இருக்க உபாயம் தாருங்களேன்... பூக்களை நீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து (அரைவேக்காடாக), சிறிது அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்தால்... எண்ணெய் குடிக்காத சில்லி காலி ஃப்ளவர் தயார். பாசிப்பருப்பு பாயசம் கூடுதலாகவும், ருசியாகவும் இருக்க என்ன வழி? பாசிப்பருப்புடன் சிறிது பச்சரிசியையும் வாசம் வரும்வரை வறுத்து வேக வைக்கலாம். பாலுக்குப் பதில் தேங்காய்ப் பாலை சேர்த்தால், கூடுதல் ருசி தரும். பீட்ரூட்டை மற்ற காய்களுடன் சேர்த்து செய்யும்போது காய்கறி கலவையில் நிறம் இறங்காமல் இருக்க என்ன செய்வது? வாணலியில் எண்ணெய் ஊற்றி பீட்ரூட்டை தனியாக சிறிது நேரம் நன்றாக வதக்கி, பிறகு மற்ற காய்களுடன் சேர்த்து வேக வைத்தால் நிறம் இறங்காது. தணுஜா: அழகர்கோவில் தோசை சூப்பராக செய்யும் முறை என்ன? புழுங்கலரிசியையும், உளுத்தம்பருப்பையும் சரிக்கு சரியாக எடுத்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து... மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாயை அரைத்து மாவில் கலந்து, தேவையான பச்சரிசி மாவு, உப்பு போட்டுக் கலந்து ஊறவிட்டு, மறுநாள் காலையில் நெய் விட்டு தோசை வார்த்தெடுத்தால், சுவையான அழகர்கோவில் தோசை ரெடி. பனீரை வீட்டிலேயே எப்படி செய் வது... எப்படி பயன்படுத்துவது? தேவையான பாலைக் காய்ச்சி, நன்கு கொதித்தவுடன் அதில் தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து திரிக்கவும். திரிந்த பாலை சுத்த மான பருத்தி துணியில் வடிகட்டினால் கொஞ்சம் கெட்டியான, மிருதுவான பனீர் கிடைக்கும். அதை சப்பாத்தி பலகையில் வைத்து சதுரங்களாக வெட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து தேவையானபோது எடுத்து எண்ணெயில் பொரித்தோ, அல்லது அப்படியே உதிர்த்தோ ரெசிபிகளில் சேர்க் கலாம். இதை 3 நாட்கள் வரை ஃப்ரீஸரில் வைத்து உபயோகிக்கலாம். சாதத்தில் போட்டு சாப்பிட திடீர் பொடி ரெசிபி..? சிறிதளவு பொட்டுக்கடலையுடன், வறுத்த பாசிப்பயறு, பூண்டு 2 பல், காய்ந்த மிளகாய் ஒன்று, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... மணம் வீசும் பொடி தயார். சாதத்தில் நெய் (அ) நல்லெண்ணெய் விட்டு, இந்தப் பொடியை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்... சூப்பரோ சூப்பர்தான்! மேக்ரோனி, சேமியா போன்றவை உதிரியாக வர என்ன செய்யலாம்? அளவை விட, அதிக நீரில் உப்பு, சிறிது எண்ணெய் விட்டுக் கொதிக்க வைத்து, அதில் சேமியா (அ) மேக்ரோனியை போட்டு முக்கால் பதமாக வெந்தவுடன் எடுத்து வடிகட்டி, குளிர்நீரில் அலசினால் உதிரியாக, ஒட்டாமல் வரும். தணுஜா: இனியெல்லாம் ருசியே! சந்தேகங்களும்... தீர்வுகளும் என்னதான் சிரமம் எடுத்துக் கொண்டு, கவனமாக உணவைச் சமைத்து, நன்றாக வந்திருப்பதாக திருப்தி அடைந்தாலும்... அதைச் சாப்பிடுபவர்கள் 'சூப்பர்!’ என்று பாராட்டும்போதுதான் நமக்கு நிறைவான மகிழ்ச்சி கிடைக்கும். அந்த வகையில் உங்கள் சமையல் பாராட்டும்படியாக அமைவதற்கும், சமையல் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் உங்களுக்கு சமையல் கலை நிபுணர்கள் உதவிக்கரம் நீட்டும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார் செ.கலைவாணி. சப்பாத்தி சாப்பிட்டால் சிலருக்கு அஜீரணம் ஏற்படும். அதைத் தடுக்க என்ன செய்யலாம்? மோரில் இஞ்சியும், பச்சை மிளகாயும் சேர்த்து அரைத்து, சப்பாத்தி மாவில் விட்டு பிசைந்து, சப்பாத்தி செய்தால் புளிப்பும், காரமும் சேர்ந்த சுவையான சப்பாத்தி கிடைக்கும். இந்த சப்பாத்தி அஜீரணத்தைத் தடுக்கும். 'புஸ்’ஸென்று உப்புகிற, சாஃப்ட்டான சப்பாத்தி செய்ய உதவுங்களேன்... சப்பாத்தி மாவு பிசையும்போது கால் கப் பால் விட்டு பிசைய, எண்ணெய் விடாமலேயே... புஸ்ஸென்று மிருதுவான சப்பாத்தி ரெடி. தொக்கு வகைகளை நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்த ஐடியா கொடுப்பீர்களா..? வெங்காய தொக்கு, மாங்காய் தொக்கு, தக்காளி தொக்கு போன்றவை நீண்ட நாட்கள் கெடாமலிருக்க, எலுமிச்சைச் சாறு பிழிய வேண்டும். பொன்னிறமான, முறுகலான அடை செய்வது எப்படி? இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, மாவுடன் சேர்த்து அரைத்து அடை சுட்டால்... பொன்னிறமாக, முறுகலாக இருக்கும். தணுஜா: அதிக எண்ணெய் சேர்க்காமல் வெங்காயத்தை வதக்க வழி கூறுங்கள்... வெங்காயத்துடன் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்தால், அதிக எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வதக்கலாம். சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்க ஒரு ஆலோசனை ப்ளீஸ்... சாம்பாருக்கு துவரம்பருப்பை வேக வைக்கும்போது, ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து வேகவிடவும். பாகற்காய் பொரியலில் கசப்பு தெரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பொரியலில் எலுமிச்சைச் சாறு அல்லது புளித்த தயிர் விட்டு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, நீர் தெளித்து வேகவிட்டால், பாகற்காயின் கசப்பு தெரியாது. சேனைக்கிழங்கை வேக வைக்கும்போது, சிலசமயம் சீக்கிரம் வேகாமல் சலிப்பு தருகிறதே... இதை சரிசெய்வது எப்படி? சேனைக்கிழங்கு சீக்கிரம் வேக ஒரு உபாயம்... வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது கல் உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்து, அதன் பின் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் சேனைக்கிழங்கைப் போட்டு வேகவிட்டால்... கிழங்கு விரைவில் வெந்துவிடும். உளுந்து வடை மாவு நெகிழ்ந்துவிட்டால் எப்படி சரியாக்குவது... ஒரு பிடி மெது அவலைக் கலந்து வடை தட்டினால், தயாரிப்பதற்கு சுலபமாகவும், மிருதுத்தன்மை குறையாமலும் இருக்கும். கேரட், பீட்ரூட் வாடிவிட்டால், அவற்றை பயன்படுத்துவது எப்படி? கேரட், பீட்ரூட்டை உப்பு கலந்த நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்தால், புதியது போல ஆகும். கரகர மொறுமொறு பூரி செய்ய உதவுங்களேன்... பூரி கரகரவென்றிருக்க, மாவு பிசையும்போது, பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்க்க வேண்டும்.
want to improve your logical reasoning for competitive exams visit http://www.kidsfront.com/competitive-exams/logical-reasoning-practice-test.html
ReplyDelete