Sunday 8 May 2016

Kitchen Tips!!!

விருந்தாளிக்கு கொடுக்க மிகவும் ஈஸியான ஸ்வீட் ப்ளீஸ்... பிரெட்டை நீளமாக வெட்டி நெய்யில் பொரித்து, பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுக்க... சுவையான திடீர் ஸ்வீட் ரெடி! வெல்லத்தை எளிதாக பொடிப்பது எப்படி? வெல்லத்தை கேரட் துருவியின் பெரிய துளைகள் உள்ள பக்கம் துருவினால், பூப்பூவாக உதிர்ந்து வரும். ரவா தோசை மொறுமொறுவென வருவதற்கு என்ன அளவு போட வேண்டும்? ரவை 2 பங்கு, மைதா ஒரு பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு என்ற அளவில் சேர்த்து, மாவு தயாரித்து, தோசை வார்த்தால்... மொறுமொறுப்பாக வரும். அல்வா கிளறும்போது, இறுகி பாறை போல் ஆகிவிட்டால் எப்படி சரிசெய்வது? முழு தேங்காயை துருவி அரைத்து பாலெடுத்து, அல்வாவில் ஊற்றி, மிதமான சூட்டில் அடுப்பை எரிய விட்டு கிளறினால், அல்வா நெகிழ்ந்து சுவை கூடுதலாகி வரும். ஃப்ரிட்ஜில் வைத்தாலும், கரன்ட் பிரச்னையால் மாவு புளிப்பதை எப்படி தவிர்ப்பது? இட்லி, தோசை மாவுடன் சிறிது காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் போதும்... மாவு சீக்கிரம் புளிக்காது. ஏலக்காய் நமத்துப் போய்விட்டால் பொடிப்பது எவ்வாறு? அடுப்பில் வெறும் வாணலியை வைத்து, நமத்துப் போய்விட்ட ஏலக்காய்களை அதில் போட்டு புரட்டி எடுத்து, பின்னர் பொடிக்க... நைஸாக பொடியும். போளியை வேகவிட்டு எடுக்கும்போது உடைந்து போகாமல் மிருதுவாக வர வழிமுறை சொல்லுங்களேன்... போளிக்கு பிசைந்த மைதா மாவை நன்கு உலர்ந்த ஆட்டுக்கல்லில் போட்டு இடித்து, பிறகு வழக்கம்போல் தயாரித்தால்... போளி விரிசல் விடாமல் மிருதுவாக வரும். குக்கரின் உள்பாகம் 'பளிச்’சென இருக்க என்ன செய்யலாம்? முதல் நாள் இரவே புளித்த மோரை குக்கரில் ஊற்றி மூடி வைத்துவிடுங்கள். மறுநாள் எடுத்து தேய்க்க... பளபளவென ஆகிவிடும்! தணுஜா: இனியெல்லாம் ருசியே! சந்தேகங்களும்... தீர்வுகளும் 'சமையல் சூப்பர்!’ - குடும்பத்தினரிடமிருந்தோ, விருந்தினரிடமிருந்தோ இந்த வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டால் போதும்... அதுவரை சமையலறை புழுக்கத்தில் வியர்க்க விறுவிறுக்க உழைத்து பட்ட சிரமங்கள் எல்லாம் மறைந்து, பஞ்சு மேகத்தில் மிதப்பது போன்ற உணர்வு தோன்றும் இல்லத்தரசிகளுக்கு. இந்த உணர்வை நிரந்தமாக்கும் வகையில், உங்கள் சமையல் சிறப்பாக அமைவதற்கும், சமைக்கும்போது ஏற்படும் சந்தேகங்களைக் களைவதற்கும் சமையல் கலையில் கைதேர்ந்தவர்கள் யோசனைகள் கூறும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு உறுதுணை புரிபவர் சுபா தியாகராஜன். கட்லெட் செய்யும்போது ரஸ்க்தூள் எண்ணெயில் உதிராமல் இருக்க என்ன செய்யலாம்? ரஸ்க் தூளில் ஒரு டீஸ்பூன் மைதா மாவைக் கலந்து, பின்னர் கட்லெட்டைப் புரட்டி எண்ணெயில் போட்டால், தூள் எண்ணெயில் உதிர்ந்து கருகாமல் இருக்கும். வித்தியாசமான பருப்பு உருண்டைக் குழம்பு தயாரிப்பது எப்படி? கடைகளில் விற்கும் பக்கோடாக்களை வாங்கி, அதில் இருக்கும் பெரிய துண்டுகளை எடுத்து பருப்பு உருண்டைக் குழம்புக் கலவையில் போட்டுத் தயார் செய்தால், வித்தியாசமான பக்கோடா உருண்டைக் குழம்பு ரெடி! சில்லி காலிஃப்ளவர், எண்ணெய் குடிக்காமல் இருக்க உபாயம் தாருங்களேன்... பூக்களை நீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து (அரைவேக்காடாக), சிறிது அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்தால்... எண்ணெய் குடிக்காத சில்லி காலி ஃப்ளவர் தயார். பாசிப்பருப்பு பாயசம் கூடுதலாகவும், ருசியாகவும் இருக்க என்ன வழி? பாசிப்பருப்புடன் சிறிது பச்சரிசியையும் வாசம் வரும்வரை வறுத்து வேக வைக்கலாம். பாலுக்குப் பதில் தேங்காய்ப் பாலை சேர்த்தால், கூடுதல் ருசி தரும். பீட்ரூட்டை மற்ற காய்களுடன் சேர்த்து செய்யும்போது காய்கறி கலவையில் நிறம் இறங்காமல் இருக்க என்ன செய்வது? வாணலியில் எண்ணெய் ஊற்றி பீட்ரூட்டை தனியாக சிறிது நேரம் நன்றாக வதக்கி, பிறகு மற்ற காய்களுடன் சேர்த்து வேக வைத்தால் நிறம் இறங்காது. தணுஜா: அழகர்கோவில் தோசை சூப்பராக செய்யும் முறை என்ன? புழுங்கலரிசியையும், உளுத்தம்பருப்பையும் சரிக்கு சரியாக எடுத்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து... மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாயை அரைத்து மாவில் கலந்து, தேவையான பச்சரிசி மாவு, உப்பு போட்டுக் கலந்து ஊறவிட்டு, மறுநாள் காலையில் நெய் விட்டு தோசை வார்த்தெடுத்தால், சுவையான அழகர்கோவில் தோசை ரெடி. பனீரை வீட்டிலேயே எப்படி செய் வது... எப்படி பயன்படுத்துவது? தேவையான பாலைக் காய்ச்சி, நன்கு கொதித்தவுடன் அதில் தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து திரிக்கவும். திரிந்த பாலை சுத்த மான பருத்தி துணியில் வடிகட்டினால் கொஞ்சம் கெட்டியான, மிருதுவான பனீர் கிடைக்கும். அதை சப்பாத்தி பலகையில் வைத்து சதுரங்களாக வெட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து தேவையானபோது எடுத்து எண்ணெயில் பொரித்தோ, அல்லது அப்படியே உதிர்த்தோ ரெசிபிகளில் சேர்க் கலாம். இதை 3 நாட்கள் வரை ஃப்ரீஸரில் வைத்து உபயோகிக்கலாம். சாதத்தில் போட்டு சாப்பிட திடீர் பொடி ரெசிபி..? சிறிதளவு பொட்டுக்கடலையுடன், வறுத்த பாசிப்பயறு, பூண்டு 2 பல், காய்ந்த மிளகாய் ஒன்று, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... மணம் வீசும் பொடி தயார். சாதத்தில் நெய் (அ) நல்லெண்ணெய் விட்டு, இந்தப் பொடியை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்... சூப்பரோ சூப்பர்தான்! மேக்ரோனி, சேமியா போன்றவை உதிரியாக வர என்ன செய்யலாம்? அளவை விட, அதிக நீரில் உப்பு, சிறிது எண்ணெய் விட்டுக் கொதிக்க வைத்து, அதில் சேமியா (அ) மேக்ரோனியை போட்டு முக்கால் பதமாக வெந்தவுடன் எடுத்து வடிகட்டி, குளிர்நீரில் அலசினால் உதிரியாக, ஒட்டாமல் வரும். தணுஜா: இனியெல்லாம் ருசியே! சந்தேகங்களும்... தீர்வுகளும் என்னதான் சிரமம் எடுத்துக் கொண்டு, கவனமாக உணவைச் சமைத்து, நன்றாக வந்திருப்பதாக திருப்தி அடைந்தாலும்... அதைச் சாப்பிடுபவர்கள் 'சூப்பர்!’ என்று பாராட்டும்போதுதான் நமக்கு நிறைவான மகிழ்ச்சி கிடைக்கும். அந்த வகையில் உங்கள் சமையல் பாராட்டும்படியாக அமைவதற்கும், சமையல் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் உங்களுக்கு சமையல் கலை நிபுணர்கள் உதவிக்கரம் நீட்டும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார் செ.கலைவாணி. சப்பாத்தி சாப்பிட்டால் சிலருக்கு அஜீரணம் ஏற்படும். அதைத் தடுக்க என்ன செய்யலாம்? மோரில் இஞ்சியும், பச்சை மிளகாயும் சேர்த்து அரைத்து, சப்பாத்தி மாவில் விட்டு பிசைந்து, சப்பாத்தி செய்தால் புளிப்பும், காரமும் சேர்ந்த சுவையான சப்பாத்தி கிடைக்கும். இந்த சப்பாத்தி அஜீரணத்தைத் தடுக்கும். 'புஸ்’ஸென்று உப்புகிற, சாஃப்ட்டான சப்பாத்தி செய்ய உதவுங்களேன்... சப்பாத்தி மாவு பிசையும்போது கால் கப் பால் விட்டு பிசைய, எண்ணெய் விடாமலேயே... புஸ்ஸென்று மிருதுவான சப்பாத்தி ரெடி. தொக்கு வகைகளை நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்த ஐடியா கொடுப்பீர்களா..? வெங்காய தொக்கு, மாங்காய் தொக்கு, தக்காளி தொக்கு போன்றவை நீண்ட நாட்கள் கெடாமலிருக்க, எலுமிச்சைச் சாறு பிழிய வேண்டும். பொன்னிறமான, முறுகலான அடை செய்வது எப்படி? இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, மாவுடன் சேர்த்து அரைத்து அடை சுட்டால்... பொன்னிறமாக, முறுகலாக இருக்கும். தணுஜா: அதிக எண்ணெய் சேர்க்காமல் வெங்காயத்தை வதக்க வழி கூறுங்கள்... வெங்காயத்துடன் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்தால், அதிக எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வதக்கலாம். சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்க ஒரு ஆலோசனை ப்ளீஸ்... சாம்பாருக்கு துவரம்பருப்பை வேக வைக்கும்போது, ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து வேகவிடவும். பாகற்காய் பொரியலில் கசப்பு தெரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பொரியலில் எலுமிச்சைச் சாறு அல்லது புளித்த தயிர் விட்டு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, நீர் தெளித்து வேகவிட்டால், பாகற்காயின் கசப்பு தெரியாது. சேனைக்கிழங்கை வேக வைக்கும்போது, சிலசமயம் சீக்கிரம் வேகாமல் சலிப்பு தருகிறதே... இதை சரிசெய்வது எப்படி? சேனைக்கிழங்கு சீக்கிரம் வேக ஒரு உபாயம்... வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது கல் உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்து, அதன் பின் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் சேனைக்கிழங்கைப் போட்டு வேகவிட்டால்... கிழங்கு விரைவில் வெந்துவிடும். உளுந்து வடை மாவு நெகிழ்ந்துவிட்டால் எப்படி சரியாக்குவது... ஒரு பிடி மெது அவலைக் கலந்து வடை தட்டினால், தயாரிப்பதற்கு சுலபமாகவும், மிருதுத்தன்மை குறையாமலும் இருக்கும். கேரட், பீட்ரூட் வாடிவிட்டால், அவற்றை பயன்படுத்துவது எப்படி? கேரட், பீட்ரூட்டை உப்பு கலந்த நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்தால், புதியது போல ஆகும். கரகர மொறுமொறு பூரி செய்ய உதவுங்களேன்... பூரி கரகரவென்றிருக்க, மாவு பிசையும்போது, பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்க்க வேண்டும்.

Kitchen Tips!!!

டீ தயாரிக்கும்போது டீத்தூள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டினாலும் பொடி தங்குகிறதே... என்ன செய்வது? தேவையான அளவு டீத்தூள், ஏலக்காய்... இரண்டையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, மெல்லிய துணியில் வடிக்கட்டவும். இதை சூடான பாலில் கலந்தால்... அருமையான ஏலக்காய் டீ ரெடி. டீத்தூளும் தங்காது. பாட்டிலில் போட்டு வைத்த ஊறுகாய்கள் எல்லாம் பழையதாகி கொஞ்சம் கொஞ்சம் தங்கிவிட்டது... இதை என்ன செய்வது? சிறிது சிறிதாக மிகுந்த ஊறுகாய் எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து, சிறிது வெல்லம் சேர்த்து, வாணலியில் போட்டு கிளறி ஜாம் போல தயாரிக்கலாம். இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். வீட்டுக்கு வரும் உறவினர், விருந்தாளிகளுக்கு வாசனையான மோர் கொடுக்க... ஒரு ஐடியா தருவீர்களா...? புதினா, கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து, ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் ட்ரேயில் வைக்கவும். ஒரு டம்ளர் மோரில் 2 ஐஸ் க்யூப், சிறிதளவு உப்பு போட்டுக் கலக்கினால்... அருமையான, கமகம மோர் தயார் முருங்கை மரம் பூத்து குலுங்குகிறது அவ்வளவு பூவும் காயாகாது. முருங்கைப்பூவை சமையலில் பயன்படுத்தலாமா? முருங்கைப் பூவை நெய்யில் வதக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, மிளகாய், உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து சட்னியாக அரைக்கலாம். பொரித்த அப்பளம் நமுத்துவிட்டால், என்ன செய்யலாம்? அதை வைத்து பச்சடி தயாரிக்கலாம். அப்பளத்தை மிக்ஸியில் கிள்ளிப் போட்டு ஒரு சுற்று சுற்றி, ஒரு கப் தயிருடன் சேர்த்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்து சேர்த்தால்... சுவையான அப்பளப் பச்சடி ரெடி. இதை வெங்காயம், கேரட் துருவல், வெள்ளரிக்காய் துருவல் கலந்தும் தயாரிக்கலாம்.  ரசத்தின் வண்டலை வைத்து... கமகம வெங்காய சாம்பார்! இனி எல்லாம் ருசியே! சந்தேகங்களும்... தீர்வுகளும் ஃபுட்ஸ் சாப்பிடுபவர்கள் முகம் மலர்ந்தால்தான், சமைப்பவர்களின் உள்ளம் நிறையும். இந்த நிறைவை உங்களுக்கு நிரந்தரமாக அளிக்கும் நோக்கத்துடன்... உங்கள் சமையல் சிறப்பாக அமையவும், சமையல் செய்யும்போது உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்க¬ளை நிவர்த்தி செய்யவும் சமையல் கலையில் கைதேர்ந்தவர்கள் ஆலோசனை தரும் பகுதி இது. இந்த இதழில் உதவிக்கரம் நீட்டுபவர், கௌரி ஷர்மா. சாம்பார் தயாரிக்கும்போது பல சமயங்களில் நீர்த்துப்போய் மேலே தெளிவாகத் தங்கிவிடுகிறதே! ருசி மாறாமல் சாம்பார் கெட்டியாவதற்கு என்ன செய்யலாம்? சாம்பாரின் மேலே தெளிவாக நிற்கும் நீரை ஒரு பாத்திரத்தில் வடித்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடியளவு பொட்டுக்கடலை, இரண்டு ஸ்பூன் துருவிய தேங்காய் இரண்டையும் மிக்ஸியின் சிறிய ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் பொடியாக்குங்கள். வடித்து வைத்திருக்கும் தெளிவான சாம்பார் நீரில் இந்தப் பொடியைப் போட்டு, ஒரு நிமிடம் கொதிக்க வைத்து, பிறகு, இதை சாம்பாரில் சேர்த்து விடுங்கள். கவனிக்கவும்... மொத்த சாம்பாரையும் கொதிக்கவிட வேண்டாம். ஏற்கெனவே தேங்காய் அரைத்துவிட்ட சாம்பார் என்றால், தேங்காய் துருவலைக் குறைத்துக் கொள்ளலாம். ரசத்தின் தெளிவான பகுதியை சாப்பிட்ட பின் ரசத்தின் வண்டல் பாகம் மிஞ்சி விடுகிறது. அதை எப்படி உபயோகிக்கலாம்? 10 சின்ன வெங்காயம், அல்லது பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் சாம்பார் பொடி மற்றும் ஒரு ஸ்பூன் துருவிய தேங்காயையும் தூவி மேலும் ஒரு நிமிடம் வதக்கி ரச வண்டியில் சேர்த்துவிட்டால்... கமகம வெங்காய சாம்பார் ரெடி! இஞ்சித் தேநீர் தயாரிக்கும்போது இஞ்சியை எப்போது சேர்ப்பது? தேநீரில் இஞ்சியின் காரச்சுவை தூக்கலாக இருக்க வேண்டுமென்றால், தோல் நீக்கிய இஞ்சியை நசுக்கி, ஆரம்பத்திலேயே தண்ணீரில் போட்டுவிட வேண்டும். பிறகு, தேநீர் தூள், பால் என சேர்க்கலாம். ஜீரணக்கோளாறு, தொண்டை எரிச்சல் முதலியவற்றுக்கு இந்த டீ இதமாக இருக்கும். வெறும் இஞ்சியின் மணம் மட்டும் போதுமென்றால், தோல் நீக்கிய இஞ்சியைத் துண்டுகளாக்கி, தேநீர் கொதித்ததும் கடைசியில் சேர்க்கலாம். தணுஜா: மெதுவடைக்கு மிக்ஸியில் மாவு அரைக்கும்போது, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தால், பிளேடு நகர மாட்டேன் என்கிறது. தண்ணீர் ஊற்றினால் மாவு இளகிவிடுகிறது.. மாவு சரியான பதத்தில் வர என்ன செய்யலாம்,? உளுந்தை 2 முறை நன்கு கழுவுங்கள். பிறகு, அளவாகத் தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் ஊற வையுங்கள்.. மிக்ஸியில் முதலில் பாதியளவு உளுந்தை மட்டும் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். மாவு தளர்வாகத்தான் இருக்கும். இப்போது மீதி உள்ள உளுந்தைப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். மாவு வடை பதத்துக்கு அரைபட்டுவிடும். இத்துடன் பொடியாக அரிந்த இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை கலந்து வடை சுடலாம். வேக வைத்த துவரம்பருப்பு சேர்க்காமலேயே ருசியான பருப்பு ரசம் தயாரிக்க முடியுமா? ஓ... கால் மணி நேரத்திலேயே தயாரிக்கலாமே! மிக்ஸியின் சிறிய ஜாரில் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, தக்காளிப் பழத் துண்டுகள், கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் சீரகம், நான்கைந்து மிளகு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்... இவற்றுடன் நெல்லிக்காய் அளவு புளியையும் உதிர்த்துப் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து சில வினாடிகள் கிளறி, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள். ஏழெட்டு நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால்... சுவையான, கமகம பருப்பு ரசம் ரெடி. ரயில் பயணங்களில் இட்லியில் மிளகாய்ப்பொடி தடவி எடுத்துப் போகும்போது, மிளகாய்ப்பொடியின் சுவை இட்லியின் உள் பாகத்தில் உறைக்க மாட்டேன் என்கிறதே..! இட்லிகளை நான்கு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அவற்றின் மேல் மிளகாய்ப் பொடியைப் பரவலாகத் தூவுங்கள். பிறகு, எண்ணெயை வட்டமாக ஊற்றுங்கள் (நல்லெண்ணெய் பயன்படுத்துவது கூடுதல் ருசி தரும்). பாத்திரத்தை எடுத்து நன்கு குலுக்கிவிட்டால் மிளகாய்ப்பொடி சீராகப் பரவிவிடும். சமையலில் எந்தெந்த உணவு வகைகளில் எண்ணெயை அப்படியே பச்சையாகச் சேர்க்கலாம்? அவியல், மோர்க்குழம்பு, தேங்காய் சாதம் முதலியவற்றில் தேங்காயைக் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் தேங்காய் எண்ணெயைக் கடைசியில் மேலே ஊற்றலாம். புளிக்காய்ச்சல், வத்தல் குழம்பு, தொக்கு வகைகளில் சாதம் செய்தால்... கடைசியில் நல்லெண்ணெயைக் கொஞ்சம் சேர்க்கலாம். பாஸ்தா, புரூக்கோலி, லெட்யூஸ், பேபி கார்ன், ஸ்வீட் கார்ன் முதலியவற்றை சேர்த்து செய்யும் சாலட் வகைகளில் மேலே ஆலிவ் எண்ணெயை பச்சையாகச் சேர்த்துக் கிளறிவிடலாம் (விரும்பினால் வினிகரும் சேர்க்கலாம்). இதனால் சாலட்டிலுள்ள காய்களின் நிறமும் மாறாமல் இருக்கும். தணுஜா: சமையல் சோடா(cooking soda / baking soda) உபயோகிப்பது உடல்நலத்திற்குக் கெடுதலா? ஆமாம் எனில், அதற்கு மாற்று என்ன? உப்பு போல சமையல் சோடா என்பது இயற்கையானதில்லை. ஒரு வகையான கெமிக்கல்தான். எனவே, அதற்கு மாற்று கிடையாது. அதை அளவு தெரிந்து பயன்படுத்தினால், நமக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்காது. ஆனால், அளவுக்கதிகமாகப் பயன்படுத்தினால் டையரியா, டிஸன்ட்ரி போன்றவை ஏற்படலாம். ஒரு கிலோ இட்லி மாவுக்கு ஒரு சிட்டிகை (பிஞ்ச்) சோடா மாவு பயன்படுத்தினால், உப்பல் நன்றாக இருக்கும். அதிகமாகப் போட்டால் இட்லி உப்பாது. வயிறுதான் உப்பும். தணுஜா: இனியெல்லாம் ருசியே! உடையாத போளி... உதிராத பஜ்ஜி! சந்தேகங்களும்... தீர்வுகளும் பாராட்டுக்கு மயங்காத, அதை எதிர்பார்க்காத மனித உள்ளம் என்பது அபூர்வம். அதுவும் சமையலறை உஷ்ணத்தை தாங்கிக் கொண்டு, நீண்டநேரம் உழைக்கும் இல்லத்தரசிகளுக்கு, 'சூப்பர்’ என்ற ஒரு வார்த்தை... எந்த களைப்பையும் நீக்கும் உற்சாக டானிக்! இந்த டானிக் தினந்தோறும் உங்களுக்கு கிடைக்கும் விதத்தில்... உங்கள் சமையல் சிறப்பாக அமையவும், சமையல் சம்பந்தமான சந்தேகங்களுக்கு விடையளிக்கவும், அந்தக் கலையில் வித்தகர்களாக விளங்குபவர்கள் உதவிக்கு வரும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு அளவற்ற அன்புடன் ஆலோசனை கூறுபவர்... சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர். வாழைப்பூ ஆயும்போது, கையில் பிசுக்கு ஒட்டுவதை எப்படித் தவிர்ப்பது? வாழைப்பூ ஆயும்போது உப்பை கையில் தடவிக் கொண்டு ஆய்ந்தால் பிசுக்கு ஒட்டாது. வெங்காய பஜ்ஜி உதிராமல் வர என்ன செய்யலாம்? வெங்காயத்தை மெதுவாக எண்ணெயில் வதக்கி, அதன்பிறகு பஜ்ஜி செய்தால், வட்ட வட்டமாக பிரியாமல் பஜ்ஜி செய்யலாம். சப்பாத்தியை எடுத்துச் செல்லும்போது அதிக நேரம் சூடாக இருக்க என்ன வழி..? சப்பாத்தியை, ஃபாயில் பேப்பரில் (சில்வர் பேப்பர்) சுற்றி எடுத்துச் சென்றால்... அதிக நேரம் சூடாக இருக்கும். காய்ந்த மிளகாயை வறுக்கும்போது ஏற்படும் நெடியை எப்படித் தவிர்ப்பது? மிளகாயை வறுக்கும்போது சிறிது உப்பு போட்டு வறுத்தால், இருமலை உண்டாக்கும் நெடி வராது.

Kitchen Tips!!!

சைதாப்பேட்டை வடைகறி சென்னையைப் பொறுத்தவரை சைதாப்பேட்டை 'வடை கறி’ ரொம்ப ஃபேமஸ். 65 ஆண்டுகாலமாக வடைகறிக்கு புகழ்பெற்றது... சைதாப்பேட்டை 'மாரி ஹோட்டல்’. இங்கே, உங்களுக்காக 'வடை கறி' சீக்ரெட் பகிர்கிறார் கடையின் உரிமையாளர் குமரன். ஐந்து பேருக்கு வடைகறி செய்ய... தேவையானவை: கடலைப்பருப்பு (அ) பட்டாணிப் பருப்பு - அரை கிலோ, இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், பூண்டு - 100 கிராம், ஏலக்காய் - 5, கிராம்பு - 5, பட்டை, லவங்கம் - 25 கிராம், சோம்பு - 50 கிராம், மஞ்சள்தூள் - 10 கிராம், தனியாத்தூள் - 50 கிராம், மிளகாய்ப்பொடி - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, பெரிய வெங்காயம் - அரை கிலோ, புதினா - ஒரு கட்டு. செய்முறை: கடலைப்பருப்பு / பட்டாணி பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். கனமான சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு விழுதை பக்கோடா போல பொரித்து எடுங்கள். பின்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் பொடி செய்து, இஞ்சி - பூண்டு பேஸ்ட்டுடன் கலந்துகொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணெயில் இஞ்சி - பூண்டு விழுது, பட்டை - சோம்பு பொடி கலவையை வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்ததும், பொரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு பகோடாக்களை சேர்த்து, அரை மணி நேரம் கொதிக்கவிடுங்கள். புதினா தூவி, இறக்குங்கள். இட்லி, தோசை, பூரி ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் இது. ---------------------------------------------------------------------- காரைக்குடி வெண்டைக்காய் மண்டி செட்டிநாட்டு ரெசிபிகளில்... இந்த மண்டி மணம் பரவாமல் இருக்காது.. பரம்பரை சமையல் கலைஞர் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் ராமசந்திரன் நமக்காக வெண்டைக்காய் மண்டி ரெசிபியை இங்கே தருகிறார். தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, வெள்ளை மொச்சை - 150 கிராம், பழைய புளி - 50 கிராம், மாங்காய் - ஒன்று, சின்ன வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 100 கிராம், பச்சை மிளகாய் - 100 கிராம், பெருங்காயம் - சிறிதளவு, கடுகு - 2 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 100 மில்லி, பூண்டு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 5, மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவையானஅளவு. செய்முறை: முந்தைய நாள் இரவே மொச்சையை ஊற வைத்து, அடுத்த நாள் தண்ணீரை வடித்துவிடுங்கள். குக்கரில் மொச்சை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேகவிடுங்கள். பழைய புளியில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து ஒரு கப்பில் கரைத்துக் கொள்ளுங்கள். வெண்டைக்காயை புளிக்குழம்புக்கு போடுவது போன்ற நீளத்துக்கு வெட்டி, வாணலியில் போட்டு எண்ணெய் விடாமல் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதே வாணலியில் 50 மில்லி நல்லெண்ணெய்யை ஊற்றி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளியுங்கள். இதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு மிதமான சூட்டில் வதக்க வேண்டும். ஓரளவு வதங்கும்போதே மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் கரைத்து வைத்த புளித் தண்ணீர், வதக்கிய வெண்டைக்காய் மற்றும் வேக வைத்த மொச்சையை சேர்த்து 15 முதல் 20 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கினால்... வெண்டைக்காய் மண்டி ரெடி. மேலும் புளிப்புக்காக மாங்காயையும் நறுக்கி இதோடு சேர்த்துக் கொள்ளலாம். மொச்சை பிடிக்காதவர்கள், வெள்ளை கொண்டைக்கடலையை பயன்படுத்திக்கொள்ளலாம்

Tips!!!

பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும். வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும். சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம். ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும். தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும். பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும். இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும். தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும். மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும். பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும். வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும். தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும். எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும். தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும். துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும். நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும். கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்துச் சமைக்க வேண்டும். குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும். தோசைக் கல்லில் தோசை வராமல் இருந்தால் வெங்காயத்தை அதில் தேய்த்து விட்டு பின் தோசை சுட்டால் தோசை நன்றாக வரும். அரிசி, பருப்பு வகைகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் போது காய்ந்த வேப்பிலைகளை போட்டு வைத்தால் புழு பூச்சிகள் அண்டாது. அடி பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய சிறிது நீரில் வெங்காயத்தை போட்டு அதே பாத்திரத்தை கொதிக்க விட்டால் சுத்தமாக மாறிவிடும். முள்ளங்கியை வேக வைக்கும் போது சிறிது சர்க்கரையை சேர்த்து வேக வைத்தால் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கியதும் மோர் கலந்த நீரில் போட்டு விட்டால் கருக்காமல் இருக்கும். முட்டையை வேக வைக்கும் போது தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து விட்டால் சீக்கிரம் வேகுவதுடன் முட்டையின் ஓட்டையும் எளிதில் பிரிக்கலாம். நன்றாக முற்றிய தேங்காயை துருவுவதற்கு கஷ்டமாக இருக்கும். அதற்கு தேங்காயை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு துருவினால், மிகவும் எளிதாகத் துருவலாம். சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதில் சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும். பொங்கல் செய்யும் போது நீர் அதிகமாகி விட்டால், அதில் வறுத்த ரவையை ஒன்று அல்லது இரண்டு கைப்பிடி போட்டு கிளறினால் பொங்கல் நன்கு சேர்ந்து கெட்டியாகி விடும். இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் கலந்து வைத்தால், இட்லி மிருதுவாக இருக்கும். உளுந்து வடை செய்யும் போது ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழையை சேர்த்து ஆட்டி செய்தால், நறுக்கிப் போட்டு செய்வதை விட வாசனையாக இருக்கும். ரவா தோசை செய்யும் போது 2 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென சுவையாக இருக்கும். முதல் நாள் வாங்கிய கீரையை மறுநாள் பயன்படுத்தும் போது கீரையின் வேர்பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால், கீரை மறுநாள் வரை வாடாமல் இருக்கும். அப்பளம், வடாம், வற்றல் போன்றவை வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது பெருங்காயத்தைப் போட்டு வைத்தால், அவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். உலர் திராட்சையை காற்றுப் புகாவண்ணம் நன்கு மூடிய பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும். காபி போட்ட பின், அந்த காபி தூளை காயவைத்து பாத்திரம் துலக்கினால், பாத்திரங்கள் மின்னும். கடலைப் பருப்பை வறுத்து, பின் போளி செய்தால், போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். பட்டாணியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால், வெந்ததும் வாசனை நன்றாக இருக்கும். தயிர் பச்சடி நீர்த்துப் போய்விட்டால், அதனுடன் சிறிது நிலக்கடலையை வறுத்து பொடியாக அரைத்து சேர்த்தால் பச்சடி கெட்டியாகிவிடும். குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், தக்களிப் பழத்தையோ அல்லது உருளைக்கிழங்கையோ வெட்டிப் போட்டு கொதிக்க வைத்தால் உப்பு குறைந்துவிடும். சாம்பார் செய்யும் போது அதனுடன் ஒரு நெல்லிக்காயைச் சேர்த்துச் செய்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும். சேப்பங்கிழங்கை தோல் உரித்ததும் அதன் கொழகொழத்தன்மை போக சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து விட்டு பிறகு எடுக்க வேண்டும். அடைக்கு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் அடை மொறுமொறுப்பாக இருக்கும். கொழுக்கட்டை செய்யும் போது மாவுடன் சிறிது பால் சேர்த்துப் பிசைந்து செய்தால் கொழுக்கட்டை விரியாமல் இருக்கும். உளுத்தம்வடை செய்யும் போது சிறிதளவு இட்லி மாவு சேர்த்துச் செய்தால், வடை சுடும் போது அதிகம் எண்ணெய் குடிக்காததோடு, சுவையும் நன்றாக இருக்கும். பாகற்காயை சிறிது நேரம் உப்பு நீரில் ஊறவைத்து பின்னர் சமைத்தால், கசப்பு குறைவாக இருக்கும். கிழங்குகளை வேக வைக்கும் முன், உப்பு நீரில் சிறிது நேரம் ஊறவைத்த பின் வேக வைத்தால் கிழங்கு விரைவில் வெந்து விடும். இட்லிக்கான அரிசியுடன் சிறிது அவல் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போன்று இருக்கும். பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும். தேங்காய் சட்னி செய்யும் போது, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால், சுவை கூடுதலாக இருக்கும். முட்டை வேக வைக்கும் போது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை ஓடு உரிக்க எளிதாக இருக்கும். மைக்ரோவேவ் அவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும். இல்லையென்றால் சிறிதாக நறுக்கியவை வெந்தும், பெரிதாக நறுக்கியவை வேகாமலும் இருக்கும். அரிசியால் செய்த உணவுகளை மைக்ரோவேவ் அவனில் மறுமுறை சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், விரைவில் சூடாகும். சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். மீனை சுத்தம் செய்வதற்கு முன் சிறிது நேரம் உப்பு சேர்த்து கிளறி வைத்திருந்தால், மீனிலிருந்து வாடை எதுவும் வராது. இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவைத்தால், இறால் வாடை மிகவும் குறைவதோடு, சுவையும் கூடுதலாக இருக்கும். துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும். சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சோயா மாவும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும். ஒரு தேக்கரண்டி சோப்புத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் இவை இரண்டையும் சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு தங்க நகைகளை இதற்குள் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து சிறிய பிரஷ் (பழைய டூத் பிரஷ்) கொண்டு தேய்த்து தண்ணீரில் கழுவினால் தங்க நகைகள் புதிது போல் மின்னலடிக்கும். தண்ணீரில் சிறிது பாலை விட்டு துடைத்தால் வெள்ளி நகை பளிச்சிடும். அதே போல் டூத் பேஸ்டால் கழுவினாலும் வெள்ளி நகை பளபளக்கும். சிறிதளவு புளியை கரைத்து சிறிது உப்பு, சிறிது சமையல் சோடா உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, இதில் வெள்ளி நகைகளைப் போட்டு எடுத்தால் நகை பளிச்சென பளபளக்கும். மழைக் காலத்தில் தீப்பெட்டிக்குள் நான்கைந்து அரிசி மணிகளைப் போட்டு வைத்தால் தீக்குச்சி உரசியவுடன் பற்றிக் கொள்ளும். குளிர் சாதனப் பெட்டியில் (Fridge) எலுமிச்சம் பழத்தின் தோலை வைத்திருந்தால் உள்ளே உள்ள நாற்றம் நீங்கி மணமாக இருக்கும். ரத்தக்கறை படிந்த துணிகளை உப்புக் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துத் துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.