Tuesday, 23 December 2014

டிப்ஸ்!!!

டிப்ஸ்: மென்மையான இட்லி...!!!
இனிப்புகள் மீந்து போனால், பிரிட்ஜில் வைக்கிறோம். இரண்டு நாட்களாகி விட்டால், அவை கெட்டிப் பட்டு சுவை குறைந்து விடுகின்றன. இந்த இனிப்புகளை கையால் உதிர்த்து, பால் ஊற்றி, அடி கனமான பாத்திரத்தில் போட்டு, நெய் ஊற்றி பதமாகக் கிளறினால், புதிய இனிப்பு தயாராகி விடும். கூடுதலாக இனிப்பு தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
குலோப் ஜாமூன் உட்புறம் வேகாமல் போனால், ஜீராவுடன் ஒரு பாத்திரத்தில் கொட்டி, குக்கர் உள்ளே வைத்து, ஒரு விசில் சத்தம் வரும் வரை காத்திருந்து இறக்கவும். சூடான, மிருதுவான, சுவையான குலோப் ஜாமூன் ரெடி!
கோஸ், பீன்ஸ், கீரை ஆகியவற்றில் பொரியல் தயார் செய்யும்போது, உப்பு அதிகமாகி விடுகிறது. இதைத் தவிர்க்க, இவை நன்கு வெந்து, சுருங்கிய பின், அளவுக்கேற்றபடி உப்பு சேர்க்கலாம்.
வடை செய்யும்போது, மாவில் சிறிது தயிர் ஊற்றினால், அதிக எண்ணெய் குடிக்காமல், மிருதுவான வடை கிடைக்கும்.
கடையில் வாங்கிய, "பிரெட்"டை தண்ணீரில் போட்டு, உடனே எடுத்து வடித்து, வெயிலில் காய வைத்து எடுத்தால், உலர்ந்த பிரெட் கிடைக்கும். இதைப் பொடி செய்து வைத்துக் கொண்டால், இட்லி, வடை, நீர்த்துப் போன குழம்பு ஆகியவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.
உலர்ந்து போன "பிரெட்" துண்டுகளை இட்லி அவிப்பது போல், குக்கரில் ஐந்து நிமிடம் வைத்து எடுத்தால் மீண்டும் மிருதுவாகி விடும்.
இட்லி மென்மையாக வராமல் பாடாய்படுத்தினால், கொள்ளை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து, இட்லி மாவுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தால், இட்லி மாவு "புசுபுசு"வென கிடைக்கும்.
தயிர் புளித்து விட்டால், தூர எறிய வேண்டாம். தயிரை மெல்லிய துணியில் கட்டி, தண்ணீரை வடிகட்டிக் கொட்டி விடுங்கள். கிடைக்கும் கெட்டித் தயிரை, துணியுடன் மூன்று, நான்கு முறை தண்ணீரில் அலசினால் புளிப்பு சுவை, வாடை நீங்கும்.
சர்க்கரை பொங்கல், பாயாசம், பிரியாணி போன்றவற்றில் முந்திரி போட விரும்பினால், திடீரென கடையைத் தேடி ஓட வேண்டாம். முன்கூட்டியே முந்திரி வாங்கி, எண்ணெய் ஊற்றாமல், பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் நாட்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதிய பாத்திரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை நீக்க, எரியும் மெழுகுவர்த்தியை ஸ்டிக்கர் ஓரங்களில் படும்படி காட்டினால், அவை உரிந்து விடும். பயன்படுத்தப்பட்ட எண்ணெயை, ஸ்டிக்கர்கள் மீது தடவினாலும், ஒரு மணி நேரத்தில், அவற்றை எளிதில் நீக்கி விட முடியும்.
பிஸ்கட்டுகள் நமுத்துப் போகாமால் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரை போட்டு, மூட்டை போல் கட்டி பிஸ்கட் டப்பாவில் போட்டு விடுங்கள்.
பேகான் ஸ்பிரே பாட்டிலுக்குள், ஊதுபத்தியை போட்டு எடுத்து, ஏற்றி வைத்தால், கொசுக்கள், பூச்சிகள் அண்டாது.
சர்க்கரையுடன் ஒன்றிரண்டு கிராம்புத் துண்டுகள் போட்டால், எறும்பு வராது.
கறிவேப்பிலை இலைகளை அரிசியுடன் போட்டு வைத்தால், பூச்சிகள், வண்டுகள் எட்டிக் கூட பார்க்காது.
வெயில் காலத்தில் பால் திரிந்து போகாமல் இருக்க, பாலுடன் நான்கைந்து நெல் விதைகளைப் போட்டு வைக்கலாம்.
வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது.
பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால், தோலை எளிதில் உரிக்கலாம்.
பூண்டை எளிதில் உரிக்க இன்னொரு ஐடியா. பூண்டில் தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் அரைத்தால், தோல் அனைத்தும் மேலே எழும்பி, ஜாரின் மேற் புறத்தில் ஒட்டிக் கொள்ளும். கீழே உரித்த பூண்டு, மையாய் அரைத்திருக்கும். ஒரே நேரத்தில் இரு வேலை!
ஒருபொருள்... பல பயன்கள்!
மாவு சலிக்க, வெயிலில் பொருட்களை உலர்த்த பொட்டலம் கட்ட... என்று நாம் பல வகைகளில் பயன்படுத்தும் பழைய செய்தித்தாள்களுக்கு இன்னும் பல உபயோகங்களை சொல்லி அசத்தியிருக்கிறார்கள் நம் வாசகிகள்.
எப்போதாவது பயன்படுத்தும் ஃபிளாஸ்க்குகள், ஹாட் பேக்குகள், வாடை அடிக்கும் டப்பாக்கள் போன்றவற்றின் உள்ளே பேப்பரை சுருட்டி வைத்து விட்டால், சில நாட்கள் கழித்துத் திறந்தாலும் நாற்றம் இருக்காது.
வாழை இலை, மஞ்சள் கொத்து முதலியவற்றை பேப்பரில் சுற்றி வைத்தால் இரண்டு நாட்கள் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
வீட்டுக்குள் செயற்கை செடிகளை வைக்கும்போது மணலுக்குப் பதிலாக செய்தித்தாள்களை கிரிக்கெட் பந்துகள் போல சுருட்டி, பூந்தொட்டியில் போட்டு விடுங்கள். மேலே சிறு சிறு கற்கள் போட்டு நிரப்பினால் தொட்டி அதிக கனமிருக்காது.
ஜன்னல்களின் கண்ணாடிப் பகுதி அழுக்காக இருக்கிறதா? பழைய நியூஸ் பேப்பரை எடுத்து தண்ணீரில் நனைத்து, ஜன்னல் கண்ணாடி முழுவதும் மறையும்படி விரித்து ஒட்டி, சில நிமிடங்களுக்குப் பிறகு எடுத்து, துணியால் துடைத்து விட்டால் உங்க வீட்டுக் கண்ணாடி பளபளக்கும்.
பட்டு மற்றும் டிசைனர் புடவைகளை பீரோவில் அடுக்கும் போது, நியூஸ் பேப்பர் சுற்றி, இடையில் உலர்ந்த வேப்பங்கொழுந்தையோ அல்லது வசம்புத்துண்டையோ வைத்து அடுக்கி விட்டால் பூச்சி, கறையான் போன்றவை கிட்டவே நெருங்காது.
வீட்டில் ஏ.சி பொருத்தும் இடங்களில் அல்லது கேபிள் ஒயர் நுழைக்கும் இடங்களில் இருக்கும் இடைவெளிகளில் நியூஸ் பேப்பரை நன்றாக சுருட்டி உள்ளே வைத்து, வெளியே நீட்டி கொண்டிருக்கும் பேப்பரைக் கத்தரித்து விடுங்கள். பின்னர் செல்லோ டேப் கொண்டு ஒரு வெள்ளைத் தாளால் அந்த இடத்தை மூடி விட்டால் பூச்சிகள் அடையாது.
பேப்பரை இரண்டு அங்குல அளவுள்ள சதுரங்கள் அல்லது செவ்வகங்களாக வெட்டிக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு பாத்திரம் அல்லது டப்பாவின் வெளிப்புறம் கொஞ்சம் எண்ணைய் பூசிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீரும் ஃபெவிகாலும் சேர்த்து கரைத்துக் கொண்டு ஒவ்வொரு பேப்பர் துண்டுகளாக அதில் தொட்டு டப்பாவின் மேல் ஒட்டி விடுங்கள். இப்படி டப்பாவின் வெளிப்புறம் முழுவதும் ஒட்டி அதன் மேல் கலர் பேப்பர் ஒட்டி அலங்கரித்து அப்படியே 12 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு பேப்பரை பிரித்தெடுத்தால் அந்த டப்பாவின் வடிவத்திலேயே பூஜாடி அல்லது பேனா ஸ்டாண்டு அழகாக நிற்கும்.
சாம்பாரோ, ரசமோ கொதிக்கும்போது அமர்க்களமான வாசனை வந்தால், அதில் உப்பின் அளவு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
ஈரம் இல்லாத கொத்தமல்லி, கறிவேப்பிலை, துளசி இலை, பச்சை மிளகாய் போன்றவற்றை ஜிப் லாக் கவர்களில் போட்டு,ஃப்ரிட்ஜில் வைத்தால் பல நாட்கள் வரை அப்படியே இருக்கும்.
காபி போடும்போது, முதலில் ஃபில்டரில் அரை டீஸ்பூன் சர்க்கரை போட்டு, பிறகு காபி பவுடர் போட்டு, டிகாஷன் எடுத்தால் காபி ருசியாக இருக்கும்.
வெந்தயத்தை முந்தின இரவு ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும்.
இரும்புச் சத்து உடம்பில் குறைவாக உள்ளவர்கள், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெல்லப்பாகை உட்கொள்வது நல்லது.
தினமும் படுப்பதற்கு முன் பால் ஏட்டை கன்னங்களில் தடவி, காலையில் முகத்தைக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருப்பதுடன் பருக்களும் வராது.
இரவில் படுப்பதற்கு முன் உள்ளங்கால்களில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்து கொண்டு படுத்தால், காலையில் எழுந்தவுடன் கால்கள் ஊன்றி நடக்கும்போது வலி இருக்காது.
கண்களின் மேல் வரும் சிறு சிறு கட்டிளுக்கு, நாமக்கட்டியை குழைத்துப் போட்டால் கட்டி மறைந்து விடும். மரப்பாச்சி பொம்மையையும் சிறிது நீர் விட்டு தேய்த்துப் போடலாம்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கு கோந்து, பெயிண்ட் போன்றவற்றைக் கொடுத்து அனுப்ப வேண்டுமா? அந்த டப்பாக்களை ஒரு ஜிப் லாக் கவரினுள் போட்டு வைத்து கொடுத்து அனுப்பினால் பையில் கொட்டாது.
தரை துடைக்கும்போது, கொஞ்சம் ஷாம்பூவையும் தண்ணீரில் கலந்து துடைத்தால் வீடு கமகமக்கும். பிசுபிசுக்கான விளக்குகள், நகைகள், வெள்ளி பாத்திரங்கள் போன்ற பொருட்களை கழுவும்போது ஷாம்பூ சேர்த்தால் பிசுக்கு நீங்கி புத்தம் புதிதாகி விடும்.
கடிதங்களையும் பேப்பர்களையும் போட்டு வைக்க சுவரில் மாட்டும் லெட்டர் ஹோல்டர் பைகளை உபயோகிப்போம்... இத்தகைய ஒரு ஹோல்டரை உங்கள் பீரோவின் கதவுக்கு உள்பக்கமாக மாட்டி வைத்தால், அதில் மின்சார அட்டை, கேபிள் கார்டு, ரேஷன் கார்டு, பாங்க பாஸ் புத்தகங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது சிரமமில்லாமல் டக்கென்று எடுக்கலாம்.
சுவர்களில் படங்கள் ஒட்டும்போது கம் போட்டு ஒட்டாமல் செல்லோ டேப் போட்டு ஒட்டினால், எடுக்கும்போது படமும் கிழியாது... சுவரும் பாழாகாது.
குளியலறையில் பல நாட்களுக்கு நல்ல மணம் பரவி இருக்க வேண்டுமா? கால் மக் தண்ணீரில் ஒரு பாக்கெட் ஷாம்பூவை கரைத்து, சுவரின் மேல் பரவலாகத் தெளித்து விடுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் உங்கள் பாத்ரூம் மணம் வீசும்.
துணி துவைக்கும்போது சோப்புடன் ஒரு பாக்கெட் ஷாம்பூவும் சேர்த்து விட்டால், துணி வியர்வை நாற்றம் மறைந்து மணமாக இருக்கும். பட்டு, சில்க் காட்டன் போன்ற துணிகளை ஷாம்பூவால் துவைத்தால் பளபளப்பு மங்காது.


வெளியூருக்கு கவரிங் நகைகளை எடுத்துச் செல்வதானால், ஜிப் லாக் கவர்களில் வைத்து எடுத்துச் செல்லலாம். இதனால் நகைகள் பழசாகாமல், அப்படியே இருக்கும்.

No comments:

Post a Comment