Friday, 3 October 2014

பாமரோசா ஆயில்!!!

பாமரோசா ஆயில்
(பாமரோசா ஆயில்என்ற ஒரு எண்ணெய் பாண்டிச்சேரி ஆரோவில்லில் தயாரித்து விற்பனை செய்யப்படுவதை பார்த்தேன். இந்த எண்ணெயை வீட்டில் 3, 4 சொட்டுக்கள் தெளித்தால் நோய் பரப்பும் ஈ, கொசு போன்றவை தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடுகின்றன. தூங்கும் போது தலையனையில் 1 சொட்டு விட்டு படுத்தால் சுகமாக தூக்கம் பிறக்கிறது. இதன் மகத்துவம் தெரிந்த பிறகு பாமரோசா ஆயில் பற்றி நமது விவசாய நண்பர்களிடம் பகிர்ந்து போட்ட பதிவு இது)
சென்னை, திருச்சி, மதுரை உள்பட ஒரளவு பெரிய சந்தை கொண்ட நகரங்களில் உள்ள பெரிய விற்பனை வளாகங்களில் நல்ல நறுமணத்துடன் கூடிய வாசனை எண்ணெய்கள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. சிறிய குடுவை போன்ற பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த எண்ணெய்களின் விலை சற்று அதிகம். ஆனாலும் பலர் தேடி வந்து இவற்றை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. தாமரை, ரோஜா, மல்லிகை போன்றவற்றிலிருந்து இப்படி எண்ணெய் வடித்தெடுத்து இந்த குடுவைகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.
பாமரோசா ஆயில்
இவற்றின் ஊடே பாமரோசா மற்றும் லெமன் கிராஸ் ஆயில் என்ற பெயருடன் ஒரு குடுவையும் பரபரப்பாக விற்பனை ஆகிறது. இந்த இரண்டும் ஒரு வகை புல் தாவரம். இவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உள்ளூரில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. அதே வேளையில் ஏற்றுமதி சந்தையிலும் இதற்கென்று தனி இடமிருப்பதாக கூறுகிறார்கள். மரபு வழி பயிர்கள் கையை கடிக்கிறதே என்று நொந்நு கொள்ளும் விவசாயிகள் சிறிய இடத்தில் இந்த புல்லை பயிரிட்டு எண்ணையை பிரித்தெடுத்து விற்பனை செய்ய முடியும். இந்த புற்கள் நன்கு வளர்ந்த பின் அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், வாசனைப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. ஊதுபத்தி தயாரிப்பிலும் உதவுகிறது. பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
பாமரோசா புல்
(இங்கு நான் பயிரிடும் முறையை இது போன்ற விவசாய பயிர்களை அறிமுகப்படுத்தும் போது கூற காரணம், எத்தனையோ விவசாயத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் இன்றைக்கு அதைவிட்டு நிர்பந்தம் காரணமாக சாப்ட்வேர் என்ஜினியராக அல்லது வேறு தொழில்களில் பரிணமிக்கிறார்கள். இவர்கள் பணமிருந்ததால் உங்கள் ஊரில் சிறிய அளவு நிலத்தை வாங்கி அதில் இது போன்ற லாபம் தரும் பயிர்களை பயிரிடலாம். ஊரில் இருக்கும். யாருக்காவது பகிர்ந்தளிப்பு முறையில் வேலை வாய்ப்பை அளிக்கலாம்)
பயிரிடும் முறை
உழவர்களின் வருமானத்தை உயர்த்த உதவும் இந்த புல்வகைகளை ஒரு முறை நடவு செய்தால் போதும். மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மறுதாம்பு பயிராக பராமரிக்கலாம். எந்த வித ரசாயன உரமும் இதற்கு தேவையில்லை. பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இயற்கை எரு இட்டு நடவு செய்தவுடன், வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். நன்கு வளர்ந்த பிறகு இரு வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சினால் போதும். நீர் தேங்காத செம்மண் மற்றும் கரிசல் மண் நிலங்களில் இந்த புல் வகைகள் செழித்து வளரும். நீர் பாசனம் செய்யும் வசதி இல்லாதவர்கள் மழை பொழியும் காலம் பார்த்து மானவாரியிலும் பயிர் செய்யலாம். நடவு செய்த பிறகு 90 முதல் 100 நாட்களில் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகும்.
அறுவடை
மறுதாம்பு பயிர்களை 60 லிருந்து 70 நாட்களில் அறுவடை செய்யலாம். நன்கு வளர்ந்த புற்களை அறுவடை செய்து எண்ணெய் பிரித்தெடுக்கும் மையத்தில் நீராவிக் கொதிகலன் மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கலாம். இந்த மையம் அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை வாரியம் கடன் வழங்கி வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் வளர்ந்துள்ள புற்களை அறுவடை செய்தால், ஒரு டன் புல் கிடைக்கும். இதனை நீராவி கொதிகலன் வழியாக எண்ணெய் பிழிந்தெடுத்தால் 3 முதல் 5 கிலோ எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை உடனடியாக சந்தையில் விற்க முடியும்.
ஒரு கிலோ எண்ணெய் ரூ. ஆயிரம் வரை விலை போகிறது. எண்ணெய் எடுக்கப்பட்ட புற்களையும் விற்பனை செய்து வருமானம் பார்க்கலாம். திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இந்த புல் வகைகள் பயிரிடப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலைகள் உள்ளன. எல்லா வகையான வாசனை திரவியங்கள், ஊதுபத்தி, வாசனை மெழுகுவர்த்தி உள்பட பல்வேறு பொருட்களில் இந்த எண்ணெய் சேர்க்கப்படுவதால் எல்லா காலங்களிலும் இந்த எண்ணெய்க்கு மதிப்புள்ளது.
கிருமிகளை ஒழிக்கும்
தற்போது இந்த எண்ணெய் பயன்படுத்தும் இடங்களில் கொசு உள்ளிட்ட நோய் பரப்பும் கிருமிகளின் தொல்லை கட்டுப்படுத்தப்படுவதால் வீடுகளில் வாங்கி தெளிக்கும் போக்கு இருந்து வருகிறது. இயற்கையான கிருமிநாசினி என்பதுடன், உடலுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் ஏராளமானவர்கள் இந்த வகை எண்ணெய்களை வாங்கி செல்கின்றனர். வருங்காலத்தில் மிகச்சிறந்த சந்தை வாய்ப்புள்ள இந்த வகை புல் பயிர்களை விவசாயிகள் இப்போதே பயிரிட தொடங்கி வருவாய் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இந்த புல்வகைகளை விவசாய கல்லூரிகளில் பெற முடியும். அணுகி கேளுங்கள்.

No comments:

Post a Comment