Thursday, 19 March 2015

பாட்டி வைத்திய குறிப்பு!!!

படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர
பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்சினை, எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும். இந்தக் குறை நீங்க அரிசி, திப்பிலியை லேசாக வறுத்து, நைஸாக அரைத்து வெறும் வயிற்றில் தேனில் மூன்று சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ஏற்படும்.
பட்டு பாதங்களின் பாதுகாப்பு
வெய்யில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் உப்பைக் கலந்து அதில் பாதங்கள் முழ்கி இருக்கும்படி 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். குளிர் நேரத்தில் பாதம் அதிக குளிர்ச்சியாக உணர்ந்தால், இரவில் நல்லெண்ணெய் தேய்த்து விட்டு தூங்க வேண்டும். காலில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு இரவு படுக்கப்போகும் போது இலுப்பை எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவினால் பித்த வெடிப்புகள் குணமாகும்.
எண்ணெய் பட்டு கொப்பளம் ஆகாமலிருக்க...
சமையல் செய்யும் போது கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டு விட்டால் உடனே அந்த இடத்தில் தேனை அல்லது கல்லுப்பு சிறிது தடவினால் கொப்புளம் ஏற்படாது.
கால் ஆணி நீங்க ...
இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.
5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
உடல் சூட்டை தணிக்க...
சிறிது தண்ணீரில் சந்தனத்தை நன்றாக குழைத்து தடவினால் உடல் சூடு தணியும். மருதாணியை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் பூசினால் சூடு தணியும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பின் அளவை குறைக்க வேண்டும். வற்றல், ஊறுகாய், நெய், இறைச்சி,
முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஒரு டம்ளர் பாலில் 25 கிராம் பூண்டுகளை தட்டிப் போட்டு, வேக வைத்து, ஆற வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.
செம்பருத்திப் பூவில் கஷாயம் செய்து இத்துடன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குணமாகும்.
சேற்றுப்புண் குணமாக...
சேற்றுப் புண் மீது இரண்டு நாட்கள் பாம் ஆயில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மீண்டும் சேற்றுப் புண் வராது.
சமையலறையில் சூடுபட்டு கொள்ளும் போது...
சமையல் வேலை செய்யும் போது சில சமயம் கவனக் குறைவால் சூடுபட்டுக் கொள்ள நேரிடும். இதற்கு பர்னால், அது, இது என்று தேடி ஓட வேண்டியதில்லை. கைக்கு அருகிலேயே இருக்கும் பொடி (தூள்) உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.
ஆஸ்துமா
ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தேன் மிக நல்ல மருந்து
ஆடாதொடை இலை ஐந்தை, 10 மிளகுடன் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.
ஆடாதொடை இலைகளை நிழலில் காய வைத்து பொடி பண்ணி வைத்துக் கொண்டும் சாப்பிட்டு வரலாம்.
கண்
தினமும் 3 தடவைகளாவது கண்களைக் கழுவ வேண்டும்.
பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை நன்றாக இருக்கும்.
முட்டையின் வெள்ளைக் கருவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
கொசுத் தொல்லை ஒழிய...
கொசுத்தொல்லைக்கு குட்நைட் போன்றவற்றை பணம் செலவழித்து வாங்க முடியாதவர்கள். வீட்டில் அருகே வளரும் தும்பைச் செடியை அரைத்து இரவில் பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கடிக்காது. தும்பைச் செடி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
ஈ மொய்ப்பதை தடுக்க...
சமையலறை, டைனிங் டேபிள் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு குவளை நீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டால் ஈ மொய்க்காது.
பல்லியை விரட்ட...
வீட்டில் பல்லிகள் நடமாடும் இடத்தில் பாச்சை உருண்டை ஒன்றிரண்டை போட்டு வைத்தால் பல்லி எட்டியே பார்க்காது. நாமும் பல்லி பற்றிய பயமின்றி நிம்மதியாக வீட்டு வேலைகளைக் கவனிக்கலாம்.
எறும்புகள் வராமல் தடுக்க...
எறும்பு பவுடர் போடும் போது அதை அப்படியே தூவி வைத்தால் மின்விசிறி சுற்றும்போது காற்றில் பறந்து சாப்பாட்டில் கூட கலந்து விடலாம். அதனால் எறும்பு பவுடரை மண்ணெண்ணெயில் குழைத்து பூசி விட்டால் எறும்பும் வராது. அதிகப் பவுடரும் ஆகாது.
கரப்பான் பூச்சிகளை ஒழிக்க...
கரப்பான் பூச்சிகள் இருக்குமிடத்தில் வெள்ளைப்பூண்டை நசுக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி சிதறி இருக்கும்படி போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்.
மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க...
தேங்காய் எண்ணெய்யில் கற்பூரத்தை கலந்து அதை பிரஷ் ஒன்றினால் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் மீது தடவி வந்தால் மூட்டை பூச்சிகள் ஒழிந்து விடும்.
விஷக்கடி
விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து, வலி குறையும்.
பூச்சிக்கடி, உடல் அரிப்பு
பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே 3 கிராம்பை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட வேண்டும். அரிப்பு நிற்கும். தேனீ , குளவி கடித்து பெரியதாக வீங்கினாலும் சரியாகி விடும். கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
தேள் கொட்டுதல்
தேள் கொட்டினால், கொட்டிய இடத்தில் சுண்ணாம்பை தடவ வேண்டும். 3 கிராம்புகளை மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கொட்டின இடம் வீங்கினாலும் வற்றிவிடும். மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து கடிவாயில் தடவினால் வலியும் வீக்கமும் மறைந்துவிடும்.
வேர்க்குரு, அரிப்பு
குளித்த பிறகு ஈரம் போக துடைத்து, மருதாணி எண்ணைய் தடவி வந்தால், அரிப்பு நின்று புண் ஆறி பரிபூரண குணம் கிடைக்கும்.
வேப்பிலையை சுத்தம் செய்து, கழுவி நிழலில் உலர வைத்து, அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குறித்தால் சரும நோய்கள் வராது.
பாசிப்பயறுடன் பொடுதலை இலையையும் சேர்த்து அரைத்துத் தேய்த்துக் குளித்தால் உடம்பு பளபளப்புடன் இருப்பதுடன் தேகத்தில் சொறி , சிரங்கு, படை போன்ற சரும நோய்கள் வராது.
நரம்பு சுண்டி இழுத்தால்...
ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும்.
நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.
பல்லில் புழுக்கள்
சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.
உடல் பருமன் குறைய...
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
வெண்மையான பற்களைப் பெற...
வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
கணைச் சூடு குறைய...
கணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.
வலுவான பற்கள்
வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
உடல் சூடு
ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
கற்கண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...
கற்கண்டு சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.
கக்குவான் இருமல்
வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.
உள்நாக்கு வளர்ச்சி
உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.
இரத்த சோகை
இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.
ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

No comments:

Post a Comment