சத்துணவு பொடி இதோ !!!
நம்ப நாட்டில் உள்ள பல இயற்கையான சத்துக்கள் நிறைந்த உணவுகள் நமக்கு இடைத்தது ஒரு வரப்பிரசாதம். இதை நிறைய பேர் கவனிக்காமல் ஹார்லிக்ஸ்,பூஸ்ட்,போர்ன்விட்டா,காம்ப்ளான்,பீடியாசுயர் போன்றவற்றில்தான் சக்தி இருக்குனு நினைத்து, நிறைய வாங்கி கொடுக்கறாங்க. அதே போல ஜீஸ், நம்ம கையால ஆப்பில், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை மிக்ஸியில் போட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால், அது அவர்களுக்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் இப்பொழுதெல்லாம் பல பேர் கடையில் கிடைக்கும் ஜீஸ் பாட்டிலை வாங்கி அதை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். இதனால் உடம்பில் சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் தான் சேர்கிறது. நாமும் இயற்கையோடு ஒன்றி, இயற்கை உணவுகளை கொடுத்தால், குழந்தைகளுக்கு நல்ல சத்துக்கள் உடம்பில் சேரும்.
இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன், மாகி நூடுல்ஸ் (magie noodles) இதிலுள்ள ரசாயன கலப்பு உடம்பிற்கு மிகவும் கெட்டது. ஆனால் முக்கால்வாசி வீட்டில் இது தான் குழந்தைகளுக்கு மாலை உணவு. இது பிற்காலத்தில் அவர்கள் உடம்பை மிகவும் பாதிக்கும். அதற்காக அவர்களுக்கு வெளி உணவே கொடுக்காதீர்கள், என நான் சொல்லவில்லை. அதையும் கொடுங்கள், இயற்கை உணவுகளை அதிகம் கொடுங்கள் என்று தான் சொல்கிறேன்.
இந்த இயற்கையான சத்துமாவு கஞ்சியை குழந்தைகளுக்கு வீட்டில் செய்து தினமும் கொடுத்தால், அது அவர்கள் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கஞ்சிப்பொடி செய்யும் முறை;
சம்பா கோதுமை -- 200 கிராம்
ஜவ்வரிசி -- 100 கிராம்
கம்பு -- 100 கிராம்
கேழ்வரகு -- 100 கிராம்
பார்லி -- 100 கிராம்
பாசிப்பருப்பு -- 100 கிராம்
பாதாம், முந்திரி -- 100 கிராம் (இரண்டும் சேர்த்து)
புழுங்கலரிசி -- 200 கிராம்
பொட்டுக்கடலை --100 கிராம்
ஏலக்காய் -- 4 எண்ணிக்கை.
புழுங்கலரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு இவற்றை சுமார் ஒரு மணிநேரம் ஊறவைத்து, பின் வடிகட்டி துணியில் உலர்த்தி, அதை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். ஆனால் முந்திரி, பாதாம் இவற்றை லேசாக வறுத்தால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள சாமான்களில் பார்லியையும், பொட்டுக்கடலையையும் வறுக்க வேண்டாம். இவை அத்தனையையும் மிக்ஸியில் போட்டு நன்றாக மாவாக திரித்து வைத்துக்கொள்ளவும். இவை அனைத்துமே எல்லா இடத்திலும் கிடைக்கும். ஒரு வேளை கம்பு, கேழ்வரகு இவை கிடைக்கவில்லை என்றால் அது இல்லாமலும் செய்யலாம். அதே போல் இந்த கஞ்சியை பாலோடு சேர்த்து வேக வைத்து கொடுத்தால், உடம்பில் பால் சத்தும் இதனுடன் சேரும்.
இவ்வளவே தாங்க, நீங்களும் உங்க குழந்தைக்கு பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?
(பின்குறிப்பு :- இத்துடன் குழந்தைகளுக்குப் பொருந்தக் கூடிய மூலிகைப்பொடி (தூதுவேளை,துளசி, ஓமவல்லி போன்று...)சேர்த்துக்
கொள்ளலாம்.
No comments:
Post a Comment